50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்
உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கொரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்கு பாதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக பாதித்துள்ளது.
இதேபோன்று 24 மணி நேரத்தில் 5,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலகிலேயே அதிகளவில் வட, தென் அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உள்ளது, 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.