Main Menu

40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் ஈழத்தமிழ் மக்கள் PTA = Marshall Law

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலை மாதம் இலங்கையின் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரதுங்க 1500 படையினருடன் கொழும்பிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக “பயங்கரவாதத்தை வழித்துத் துடைக்க வேண்டும்” என்ற ஒற்றைக் கட்டளையின் கீழ் இராணுவம் தமிழ் மண்ணில் செயற்படத் தொடங்கியது.

பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு தற்காலிக ஏற்பாடு என அப்போது சொல்லப்பட்டாலும் 1982ஆம் ஆண்டிலிருந்து அது ஒரு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து இன்று 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை வடக்கு-கிழக்கான தமிழ் மண்ணும் தமிழர் இலங்கைத் தீவில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் மீதும் இந்த இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த இராணுவச் சட்டம் இவ்வாண்டு யூலையோடு 39 ஆண்டுகளைக் கடந்து 40வது ஆண்டில் கால் வைத்திருக்கின்றது.

இதனை மேலெழுந்தவாரியக பார்ப்போர் பயங்கரவாதத்திற்கு’ எதிரான ஒரு சாதாரண சட்டம் என கருதுவர். ஆனால் இது ஒரு சாதாரண சட்டமல்ல. இது ஓர் இராணுவ ஆட்சிக்கான சட்டம்.

இதனை Marshall Law என்று அழைப்பதே சரியானது. அதாவது தமிழ் மண்ணின் மீதும், இலங்கையின் எப்பகுதியிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மீதும் ஓர் இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதே இங்கு சரியானதாகும்.

PTA எனப்படுகின்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இராணுவ ஆட்சிக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.அதாவது படையினரால் கொல்லப்பட்டவர்களை மரண விசாரணையின்றி புதைக்கவோ, எரிக்கவோ முடியும்.

கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்திருக்க முடியும். கைது செய்யப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்படவோ அல்லது அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவோ முடியாதவாறு தொடர்பற்ற முறையில் (incommunicado) சிறையில் வைத்திருக்கப்பட முடியும்.
ஓப்புதல் வாக்குமூலத்தை தண்டைக்குரிய ஆதாரமாக பயன்படுத்த முடியும்.


இவற்றின் மூலம் தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கான கட்டற்ற அதிகாரமும், அனுமதியும் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மொத்தத்தில் Marshall Law என்று சொல்லப்படுகின்ற இராணுவ ஆட்சிக்குரிய அனைத்து இயல்புகளையும் முழுமையாகக் கொண்டுள்ளது.

அப்படியாயின் 40 ஆண்டுகளாக தமிழ் மண்ணும், தமிழ் மக்களும் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே உண்மையானதாகும்.

யூலை 13ம் தேதி இரவு யாழ்ப்பாணம் நவாலியில் தமது வீட்டில் உறக்கத்தில் இருந்த இன்பன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் செல்வம் ஆகிய இருவரும் படையினரால் கைது செய்யப்பட்டு சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு நடைமுறையில் இராணுவ பயங்கரவாதம் தமிழ் மண்ணில் பிரகடனப்படுத்தப்படலாயிற்று.

நவீன அரசியல் வரலாற்றில் இந்த இராணுவ ஆட்சி பற்றிய சிந்தனையை பொதுவாக மேற்குல அரசியலில் இருந்தும் குறிப்பாக பிரான்சிய புரட்சிக் காலத்திலிருந்தும் அடையாளம் காணலாம்.

Marshall Law என்ற இராணுவ ஆட்சிப் பிரகடனத்தின் குறியீடாக முடியாட்சிக்கு விசுவாசமான இராணுவத் தளபதி லஃப்பேதி (Lafayette) 1791ஆம் ஆண்டு பாரிசில் சிவப்புக் கொடியை பறக்கவிட்டார்.

இந்த சிவப்புக் கொடி மூலமான இராணுவ ஆட்சியானது குடியரசுவாதிகளும், சமத்துவவாதிகளுமான Jacobins களுக்கு எதிராக படுகொலையை கட்டவிழ்த்துவிட்டு பல டசின் கணக்கான புரட்சியாளர்களை படுகொலை செய்தது.

இவ்வாறான இராணுவம் பயங்காரவாதத்தை எதிர்த்து புரட்சியாளர்களான Jacobins அந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக இராணுவத்தை தாமும் ஒடுக்குவோம் என்ற பொருளில் அதே சிவப்புக் கொடியை தாங்களும் ஏந்தத் தொடங்கினர்.

அதாவது சிவப்புக் கொடி என்பது இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் குறியீடாக ஒருபுறம் அமைந்த போது அந்த சிவப்புக் கொடிதாங்கிய இராணுவத்தின் அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தாமும் அவ்வாறே இராணுவத்தை அழிப்பதற்கான குறியீடாக சிவப்புக் கொடியை புரட்சியாளர்கள் ஏந்தினர்.

இங்கு இராணுவச் சட்டத்திற்கு குறியீடாகவும் சிவப்புக் கொடி உதயமானது. அந்த சிவப்புக் கொடியின் ஆதிக்கதிற்கு எதிரான பதில் பலாத்காரத்தின் சின்னமாக புரட்சியாளர்களும் சிவப்புக்கொடி ஏந்தினர்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இராணுவ ஆட்சி என்பது சிவப்புக் கொடியின் கீழ் ஒடுக்குமுறையானது. அதேபோல அந்த இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான தமது பதில் நடவடிக்கையும் வன்முறை சார்ந்தது என்ற வகையில் புரட்சியாளர்களும் சிவப்புக் கொடி ஏந்தினர்.

இலங்கை அரசின் பயங்கரவாத இராணுவ ஆட்சிக்கு எதிராகவே தமிழ்த் தரப்பில் வன்முறை என்ற ஆயுதம் தாங்கிய போராட்டம் வடிவம் பெற்றது என்பதை மேற்படி வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டியதும் அவசியம்.

இந்த இராணுவ ஆட்சிச் சட்டத்தின் வளர்ச்சியை இன்னும் சற்று விரிவாக நோக்கலாம்.

1836 ஆம் ஆண்டு ஆட்சியாளரான இராணுவத் தளபதி Antono Lopez de Santa Ana என்பவர் அலமோவை (Alamo) முற்றுகையிட்ட போது சிவப்புக் கொடியை பறக்கவிட்டு தனது இராணுவ ஆட்சியை (Marshall Law)பிரகடனப்படுத்தினார்.

அப்போது “No surrender, No clemency” என்ற கடும் இராணுவ ஆட்சிக் கொள்கையை சிகப்பு கொடியின் கீழ் பிரகடனத்தினார்.

இதன் கீழ் கிளர்ச்சியாளர்கள் பெரிதும் படுகொலை செய்யப்பட்டனர். இது ஒடுக்குமுறையாளாரான இராணுவ ஆட்சியாளன் பிடித்த சிவப்புக் கொடி.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1848ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் போது இடதுசாரிகள் பரவலாக சிவப்புக் கொடியேந்தி போராடலாயினர்.

இதன் பின்பு மெக்சிகோவில் 1866ஆம் ஆண்டு தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை என்ற கோரிக்கையின் கீழ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர்.

அப்போது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு படுகொலைக்கு உள்ளான போதிலும் அவர்களது கோரிக்கை வெற்றி பெற்று மே மாதம் முதலாம் நாள் உலகத் தொலாளர்கள் தினமாக பிரகடனப்படுத்தப்படலாயிற்று.

இதன் பின்பு 1871ஆம் ஆண்டு பிரான்சில் பாரீஸ் கம்யூன் (Paris Commune) தனது உத்தியோகபூர்வ கொடியாக சிவப்புக் கொடியை ஏந்தி புரட்சியில் ஈடுபட்டது.

அன்றிலிருந்து கம்யூனிஸ்டுக்களின் கொடியாக சிவப்புக் கொடி உத்தியோகபூர்வ கொடியாக பிரகடனப்படுத்தப்படலாயிற்று.

1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடந்த போது கம்யூனிஸ்டுக்கள் சிவப்புக் கொடியேந்தி புரட்சியை முன்னெடுத்து ஆட்சி அமைந்தனர்.

பின்பு அந்த வெறும் சிவப்புக் கொடியில் 1923ஆம் ஆண்டு லெனின் பொன்நிறத்தில் அரிவாள் – சுத்தியல், பொன்நிற விளிம்பைக் கொண்ட சிவப்பு நட்சத்திரம் என்பனவற்றை இணைத்துக் கொண்டார்.

அதாவது முதலாளிவர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக தொழிலாளி, விவசாயி வர்க்க ஆதிக்கத்தை குறிக்கும் வகையில் அரிவாளும், சுத்தியலும் அமைய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நட்சத்திரமும் அமைந்தது.

இங்கு இராணுவ ஆட்சி என்ற Marshall Law முதலாளிவர்க்கம் அவ்வப்போது பிரகடனப்படுத்துவதற்கு சிவப்புக் கொடியை அபாய எச்சரிக்கையாக, இராணுவ சர்வாதிகாரத்தின் குறியீடாக பயன்படுத்துவதாகவும் அத்தகைய இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சியாளர்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் ஆகிய தாம் நிரந்தரமாக சிவப்புக் கொடியை ஏந்துவதாக கம்யூனிஸ்டுக்கள் வியாக்கியானம் கொண்டனர்.

அதாவது கொடுங்கோன்மைமிக்க மன்னர்களினதும், ஒடுக்குமுறையாளர்களினதும் இராணுவ ஆட்சியின் சின்னமான சிவப்புக் கொடியை அவ்வப்போது ஏந்தி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு எதிராக தாமும் அதேபோல வன்முறை மிகுந்த பாதையில் அந்த இராணுவ கொடுங்கோன்மையை நிரந்தரமாக எதிர்க்கின்றோம் என்ற பொருளில் கம்யூனிஸ்டுக்கள் சிவப்புக் கொடியை தமது கட்சியின் சின்னமாக்கிக் கொண்டனர்.

அதாவது இராணுவ வன்முறைக்குப் பதில் அதே வன்முறை என்ற வகையில் இந்த சிவப்புக் கொடியை புரட்சியாளர்கள் கைக்கொண்டனர்.

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்டுக்கள், கம்யூனிஸ்டுக்கள், கிளர்ச்சியாளர்கள் என்போரின் சின்னமாய் சிவப்புக் கொடி மாறியது.

இந்த வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டால் தமிழ் மண்ணில் இராணுவ ஆட்சி 1979ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதம்தாங்கிய போராட்டமானது மக்கள் ஆதரவுடன் எழுந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய அனைத்து காரணங்களும், தேவைகளும், அபிலாசைகளும் அப்படியே உள்ளன.

இலங்கை அரசு இராணுவ ரீதியாக முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலை வாயிலான வெற்றியைப் பெற்றுவிட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறுகிறது.

1836ம் ஆண்டு அல்மோ முற்றுகையின் போது இராணுவத்தளபதி அன்டனோ டீ அனா “No surrender, No clemency என்று கூறி கிளர்ச்சியாள்களை படுகொலை செய்தார்.

ஆனால் அதைவிடவும் படு மோசமான வகையில் 2009 மே முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் தலைமையில் சரணடைத பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அரசபடை படுகொலை செய்தது.

அத்துடன் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரும் கூட படுகொலை செய்யப்பட்டோரேயாவர்.

இத்தகைய இராணுவ வெற்றியின் துணைகொண்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் அனைத்து வகையிலும் ஒடுக்குவதற்கான வாய்ப்பை அரசு இதன் மூலம் நிலைநாட்டி வருகிறது.

எப்படியோ சுமாராக 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தமிழ் மண்ணிலும், தமிழ் மண்ணிற்கு வெளியே இலங்கையின் எப்பகுதியிலும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவே வாழ்கின்றனர்.

இன்று காணப்படும் அரசியல் கைதிகள் அனைவரும் மேற்படி பயங்கரவாத தடைச்சட்டம் என்று சொல்லப்படுகின்ற இராணுவ ஆட்சிச் சட்டத்தின் கீழ்தான் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து பத்தாண்டுகளை எட்டும் வேளையிலும் தமிழ் மண்ணும், தமிழ் மக்களும் இராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளனர்.

40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் 3 இலட்சத்திற்கும் மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

90,000க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகளாய் உள்ளனர்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொகை வேறு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை வேறு.

மேலும் 11 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர்.

உள்நாட்டில் அகதிகளாகியும், வீடுகள், வாசல்கள், காணிகள், சொத்துக்கள் என்பவற்றை இழந்தும், உறவினர்களை இழந்தும் அல்லல்பட்டு வாழ்கின்றனர்.

மேற்படி 40 ஆண்டுகால இராணுவ ஆட்சியைக் கொண்ட இன்னல்களுக்கு உட்பட்டிருக்கும் மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ‘பொதுவாக்கெடுப்பின்’ மூலம் தமக்கான தலைவிதியை நிர்ணயிப்பதற்கான தேவையுள்ளவர்கள் என்பதே இங்கு கவனத்திற்குரிய முக்கிய விடயமாகும்.

உலகில் இராணுவ ஆட்சி என்பது ஒரு சிறிய குறுகிய காலத்திற்கு மட்டுமே பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பது வழக்கம்.

ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் மீது 40 ஆண்டுகளாய் இராணுவ ஆட்சி நடைமுறையில் உள்ளது

P.T.A=Marshall Law என்பதே நடைமுறை சார்ந்த சரியான சமன்பாடாகும்.

இந்த சட்டத்தை 1979ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தும் போது தற்காலிக சட்டம் என்று சொல்லப்பட்டாலும் 1982ஆம் ஆண்டு அது நிரந்தர சட்டமாக்கப்பட்டு 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது இராணுவ ஆட்சி பிரயோகத்தில் உள்ளது.

புயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றம் என்பது படையினரின் ஒரு பொம்பையாக உள்ளது. சித்தரவதை செய்து பெறும் ஓப்பதல் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு அதனடிப்படையில் குற்றச்சாட்டை நிருபிக்கும் அதிகாரத்தை படைத்தரப்பு கொண்டிருப்பது மட்டுமன்றி எத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்பதை அரச தரப்பு சட்டவாளர் ஊடாக படையினர் நிறைவேற்றி விடுகின்றனர்.

இங்கு படையினரின் பிரதிநிதியான சட்டவாளர் சொல்லும் அல்லது எழுதிக் கொடுக்கும் தண்டனையைத்தான் நீதிபதி சட்டத்தின் பெயரால் தீர்ப்பாக வாசிக்கின்றார். இங்கு நீதிமன்றம் என்பது அதிகாரமற்ற ஒரு சம்பிரதாயபூர்வமான அமைப்பாகவும் படையினரின் கையாளாகவும் அது செயற்படுகிறது.
யுத்தம் முடிந்த பின்பும் இதுவே நடைமுறையாக உள்ளது.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பின்புங்கூட அந்த இராணுவ ஆட்சிச் சட்டத்தை நீக்கவில்லை. அதாவது தமிழ் மக்களை எதிரியாகவும், அந்நியராகவும் கணிப்பதன் வாயிலாகவே இந்த இராணுவ ஆட்சி நடைமுறையில் உள்ளது. 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியுடன் இல்லை என்ற உண்மையை இந்த இராணுவச் சட்ட ஆட்சி உலகிற்கு பிரகடனப்படுத்தி நிற்கின்றது.

1979ஆம் ஆண்டு 1500 படையினருடன் தமிழ் மண்ணில் உருவான இராணுவ ஆட்சி இன்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினரைக் கொண்டதாய் தமிழ் மண்ணில் விரிவடைந்திருக்கிறது.

ஒரு பிரிகேடியர் தர இராணுவத் தலைமைத் தளபதியுடன் ஆரம்பமான இராணுவ ஆட்சி இன்று பீல்டுமார்ஷல் தர தளபதிகள் வரை விரிவடைந்திருக்கிறது.
இராணுவ ஆட்சியின் விரிவாக்கத்தை விளக்க இவை மிகப் போதுமான உதாரணங்களாகும்.

இலங்கை இராணுவம் வெளிநாடுகளுடன் யுத்தம் புரிவதற்காக வடிவமைக்கப்படவில்லை.

மாறாக அது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்காகவே வடிவமைக்கப்பட்டு தொடர் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அரசியல் தீர்வின்றி அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் இராணுவ ஆட்சியின் கீழ் ஒடுக்கப்படும் மக்கள் ஒருபோதும் சிங்கள அரசின் பக்கம் சாயமாட்டார்கள் என்பதை இந்த 40 ஆண்டுகால வரலாற்று நடைமுறை நிருபித்து நிற்கின்றது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமக்கான தலைவிதியை தமிழ் மக்கள் நிர்ணயிக்க இந்த 40 ஆண்டுகால இராணுவ ஆட்சி என்ற அம்சம் மட்டுமே போதுமான காரணமாகும்.

மு.திருநாவுக்கரசு

பகிரவும்...