Main Menu

28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக வால்ட் டிஸ்னி அறிவிப்பு!

பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவனான வால்ட் டிஸ்னி நிறுவனம், 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

பெரும்பாலும் இந்த பணிநீக்கங்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் இருக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் 67 சதவீத பகுதிநேர வேலை அடங்கும்.

கொரோனா பரவல் காரணமாக, டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்கள் பார்வையாளர் திறன் இன்றி முழுமையாக முடங்கிப்போயுள்ள நிலையில், நிறுவனம் இந்த முடிவினை எடுத்ததாக டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமாரோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் பூங்காக்கள், அனுபவங்கள் மற்றும் தயாரிப்புகள் பிரிவில் அனைத்து மட்டங்களிலும் எங்கள் பணியாளர்களைக் குறைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த கடினமான முடிவினை நாங்கள் மிகவும் கனத்த மனதுடன் எடுத்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி குரூஸ் லைன் மற்றும் டிஸ்னியின் சில்லறை கடைகளும் பாதிக்கப்படும் என்றாலும், தீம் பூங்காக்கள் பெரும்பாலான பணிநீக்கங்களுக்கு காரணமாக இருக்கும் என கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதால் டிஸ்னி இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் அனைத்து பூங்காக்களையும் மூடியது. ஆனால் கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் மட்டுமே மூடப்பட்டுள்ளது.

டிஸ்னி ஷாங்காய், ஹொங்கொங், டோக்கியோ மற்றும் பரிஸிலும் பூங்காக்களைக் கொண்டுள்ளது. அவை இந்த அறிவிப்பால் பாதிக்கப்படவில்லை.

பகிரவும்...