Main Menu

20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்!

20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உங்களின் தேசத்தின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்காக நீங்களே 20 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்துள்ள நிலையில், தமிழர்  தேசத்தை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான நாளாகும்.

எங்களுடைய தேசத்தினதும் உங்களது தேசத்தினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும், எமது தமிழ் தேசியத்தின் அங்கீகாரத்திற்காகவும் ஜனநாயக வழியில் வன்முறையின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த மாவீரன் திலிபனின் 8ஆம் நாள் நினைவேந்தலை இதயத்தில் நிலைநிறுத்திக்கொள்கிறேன்.

 20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடு என்று கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் செய்கின்றனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை கூற வேண்டும்.

அரசியலமைப்பின் 10 ஆம் 14 ஆம் சரத்துக்களுக்கமை இருக்கும் எங்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் உரிமைகளை இந்த அரசாங்கம் மறுத்துள்ள நிலையில் அதனை ஆமோதிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்திற்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.

20 ஆவது திருத்தத்திற்கு எதிராகவே நாங்களும் இருக்கின்றோம். அது நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்தும். ஆனால் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் ஒருபுறம் இந்த தீவில் உங்களின் சகோதர தேசத்தின் உரிமைகளை முற்றாக மறுத்துக்கொண்டு உங்களுடைய ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த முடியுமென்று நினைக்க முடியாது.

கடந்த 70 வருடங்களாக உங்களால் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாமைக்கு உங்களின் மனநிலையே காரணமாகும். 18 ஆம் திருத்தத்தின் ஊடாகவோ, 19 ஆவது திருத்தம் ஊடாகவோ அது பாதுகாக்கப்படவில்லை. 20 ஆவது திருத்தத்தின் மூலமும் அதனை பாதுகாக்க முடியாது.

ஏனென்றால் இந்த தீவில் தமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது. என்பதனையும் இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன்.

வடக்கில் கிழக்கில் எங்களின் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர முடியாது என்று நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அதேபோன்று வவுனியா நெடுங்கேணியில் வெடுக்குநாறி ஆலயத்தில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும் காவல் துறையினர் அதனை குழப்பிக்கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தினால் அதனை நடத்த முடியும் என்று கூறியுள்ள போதும் பொலிஸார் இடையூறு செய்கின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியை சேர்ந்த குணராசா பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

இப்படியான நெருக்கடி நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். எங்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்காக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...