பௌத்த சாசன சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கோரிக்கை
பௌத்த மதத்தின் நீண்டகாலப் பாதுகாப்பானது தர்மம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த துறவிகள் மத்தியில் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த சாசனத்திற்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட காலப்பகுதிகளில் எல்லாம், மதத்தைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தங்கள் ஊடாகவே அவற்றுக்குத் தீர்வுகள் காணப்பட்டதாக பௌத்த வரலாறு சான்று பகிர்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவது பௌத்த மாநாடு (Dharma Sanghayana) முதல் கண்டி இராச்சியக் காலத்தில் வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர தேரரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் வரை, பௌத்த மதத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இத்தகைய முயற்சிகள் உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் பௌத்த சாசன சீர்திருத்தங்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மதத்தை வலுப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இறந்ததைத் தொடர்ந்து முழுமையடையாமல் கைவிடப்பட்டன.
தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில், மறைந்த மடிஹே பஞ்ஞாசீஹ மகாநாயக்க தேரரின் வழிகாட்டலில், முழுமையான அரச ஆதரவுடன் பௌத்த மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பௌத்த துறவிகளில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பௌத்த நிறுவனங்களுக்குள் காணப்படும் தற்போதைய பிரச்சினைகளால் பயனடையும் குழுக்களே, சுதந்திரத்திற்குப் பின்னரான இரு சந்தர்ப்பங்களிலும் இத்தகைய அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைத் தடுப்பதற்காக உழைத்ததாக முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது பௌத்த மதம் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், இந்த நெருக்கடிக்கான மூல காரணங்களைக் கண்டறிந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு விரிவான உள்வாரி கலந்துரையாடல் ஒன்று அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களை மட்டும் மையப்படுத்துவதோ அல்லது அது தொடர்பான பொது விவாதங்களை ஒடுக்க முயற்சிப்பதோ பௌத்த சாசனத்தைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பௌத்த சாசனத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், பௌத்த மாநாடொன்றை (Dharma Sanghayana) கூட்டுவதற்கு மகாநாயக்க தேரர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இத்தகையதொரு முயற்சிக்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, சிரேஷ்ட பௌத்த இல்லறத் தலைவர்கள் குழுவொன்றுடன் இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் அக்கோரிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
