Main Menu

நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது அரசாங்கம்; ரில்வின் சில்வாவின் கருத்துக்கு மனோ கணேசன் கடும் கண்டனம்

நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, தற்போதைய அரசாங்கமே மக்களை ஏமாற்றி வருகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் இன்று (30) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்து வருகின்றது. மாகாண சபை தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்க தரப்பினர் மக்களைச் சந்திக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வின் வடிவமாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை தேர்தல் குறித்து முற்றிலும் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். இது மக்களை ஏமாற்றும் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அவமதிக்கும் செயலாகும்.

தேசிய மக்கள் சக்தி ஒரு கம்யூனிசக் கட்சியாகும், அது ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல. அவர்களின் கட்சி முறைமையின்படி, கட்சியின் செயலாளருக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன.

டிட்வா சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

இதில் கடுமையான சட்டச் சிக்கல் உள்ளது. நாட்டின் நிதி தொடர்பான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. நாடாளுமன்றத்திற்குள் உரிய பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தே நிதியை மாற்றியமைக்க முடியும். அதற்கு மாறாக தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. இது குறித்து நாடாளுமன்ற நிதி பற்றிய குழு ஊடாக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராக தண்டிப்பு நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமல்ல. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கூறாது இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்த முடியும்.

தற்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நிறைவடையவுள்ளது. இருப்பினும் மாகாண சபை தேர்தல் குறித்து உரிய தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை. ஆகவே, தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.