20ஆம் திருத்தச் சட்ட மூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த அமைச்சரவை அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கான அனுமதி கிடைத்ததுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 19ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் பிரதான விடயங்களாகக் காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்றும் விதிக்கப்பட்டது. அத்துடன் தகவலறியும் உரிமைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டது.
இவ்விடயங்களை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் முழுமையாகச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதற்கு அமைய அவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83ஆவது பிரிவிற்கு அமைய பொதுஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய விடயங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூல வரைபில் குறிப்பிடப்படவில்லை. அதாவது ஜனாதிபதி, நாடாளுமன்றம் ஆகியவற்றின் பதவிக் காலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அவசியமாகும்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைத் தொடர்ந்து அமைச்சரவையில் நீதியமைச்சரினால் சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.