Main Menu

19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கே அதிகாரம்: ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலை விட பொதுத்தேர்தல் தொடர்பாகவே தாம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியல் திருத்ததினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும் எனவே ஜனாதிபதி வேட்பாளரை விட பிரதமர் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியிலிருந்து வேறு கட்சிக்குத் தாவும் சிலர் நாட்டைப் பற்றி சிந்திப்பதில்லை மாறாக அவர்கள் தங்கள் சொந்த இலாபங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். எனவே இவ்வாறு கட்சி தாவும் உறுப்பினர்கள் தொடர்பாக மக்களே முடிவினை எடுக்க வேண்டும்.

நாட்டின் நலனுக்காக அல்லது மக்களுக்காக எத்தனை பேர் அரசியலில் ஈடுபடுகிறார்கள் ஒரு சிலரே உள்ளனர். அத்தோடு ஊழல் இல்லாத நாட்டினை உருவாக்கும் செயற்பாட்டுக்கு எத்தனை அரசியல்வாதிகள் உடன்படுகிறார்கள். உள்ளூராட்சி அமைப்புகளில் 99% ஊழல் நிறைந்தவை. இந்த ஊழலை அகற்ற எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை.

எனவே மோசடிக்கு காரணமான மக்கள் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும். இவர்கள்தான் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக மத்திய வங்கி முறிகள் மோசடிக்கு பொறுப்பானவர்கள் கண்டிப்பாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அவர்கள்தான் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். எதிர்காலத்தில் பல விடயங்கள் வௌியாகும்

19 ஆவது அரசியல் திருத்தம் காரணமாக அடுத்த ஜனாதிபதிக்கு எதனையும் செய்யும் அதிகாரம் இருக்காது. அனைத்து அதிகாரமும் பிரதமருக்கே இருக்கும்.

எனவே கட்சி அடுத்த ஜனாதியைத் தெரிவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடாது. அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2020 ஆம் ஆண்டில் சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்கப்படும்” என கூறினார்.

பகிரவும்...