Main Menu

எத்தனை முறை கூறினாலும் பொய் உண்மையாகாது: பிரியங்கா காந்தி

எத்தனை முறை திரும்ப திரும்ப கூறினாலும் பொய் உண்மையாகாதென காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

ஆகையால் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார சரிவை  மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவேற்றியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்களை  சந்தித்துள்ளோம்.

பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் மத்திய அரசு பார்க்க வேண்டும்.

இந்த பொருளாதார மந்தநிலை அனைவருக்குமானதுதான். எத்தனை நாட்களுக்குதான் இந்த அரசு மந்தநிலை இல்லை எனும் வார்த்தையை கூறி ஏமாற்ற முடியும்.

நூறு முறை மீண்டும் பொய்களை திரும்ப திரும்பப் கூறினாலும், அது உண்மையாகாது” என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்தியாவின்  உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜுலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே உள்ளது.

ஆனால் மத்திய அரசு, பொருளாதாரத்தில் சரிவு ஏற்படவில்லையென தொடர்ந்து கூறிவருவதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்நிலையிலேயே பிரியங்கா காந்தியும் நாட்டின் பொருளாதார சரிவு குறித்து டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...