Main Menu

“சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்”

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2017, 2018 மற்றும் 2019 ஆகிய வருடத்திற்குள் தேசிய புலனாய்வு துறையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தன முன்வைத்துள்ள சத்திய கடதாசி மற்றும் ஏனைய ஆவணங்களின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தடுக்க தவறியமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த இடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை குறித்த தாக்குதல்களை தடுப்பதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்ததின் கீழ் அமைச்சரவை நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சரவைக்கு மாத்திரம் குற்றச் சாட்ட முடியாதெனவும் ஜனாதிபதி சட்டதரணி இதன்போது விளக்கமளித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமைத்துவத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனகே அலுவிஹார, சிசிரத ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையிலேயே 12 மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பகிரவும்...