Main Menu

19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது என வியத்மக அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடு பொருளாதார, சமூக நெருக்கடியினை எதிர் கொண்டிருந்தது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தன. இதற்கு கடந்த அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிலைமைகளே இதற்கு பிரதான காரணியாக காணப்பட்டன.

தேசிய பொருளாதாரம் மேம்படுத்த வேண்டுமாயின் தேசிய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்பட்டு உற்பத்தி துறையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கம் இறக்குமதியிலே அதிகளவில் தங்கியிருந்தது. தேசிய உற்பத்தியாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதனால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இவரது பணிப்புரைக்கு அமைய உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளன.

இவை இன்று தேசிய உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு விதத்தில் நன்மை பயக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமானதாக காணப்படுகின்றது. இவரது கொள்கைகளை செயற்படுத்தும் பலமான நாடாளுமன்றம் தோற்றம் பெற வேண்டும்.

அதிகார போட்டியினை தோற்றுவித்துள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைப்பது பிரதான காரணியாகும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும்.

அனைத்திற்கும் தடையாகவுள்ள 19 ஆவது திருத்தம் பெரும்பான்மை பலத்துடன் மாற்றியமைக்கப்படும். என்பதில் உறுதியாக உள்ளோம்.

மக்களை மையப்படுத்திய பொருளாதார கேந்திரம் தோற்றம் பெற வேண்டுமாயின் மக்களுக்கு பயன் தரும் அரசியலமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...