Main Menu

14ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நேற்றைய தினம் அங்கு அஞ்சலி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதேபோன்று அண்மையில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட நஸிர் அஹமட், முஷாசரப் ஆகியோருக்கு எதிரான பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி கடந்த 20ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவும் உடனடியாக வௌியேற வேண்டும் எனவும் அவர்கள் வௌியேறும் வரையில், போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிபெஹே சிறிதம்ம தேரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...