Main Menu

13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.

இதனையடுத்து குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

பகிரவும்...