Main Menu

ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகள் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 18 கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வன்முறையில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்தக் கலவரச் சம்பவம் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 190 கி.மீ. தூரத்தில் உள்ள வடக்கு துறைமுக நகரமான தேலாவில் அமைக்கப்பட்ட புதிய சிறைச்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்துள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி அலுவலக ஊழியர்களின் தலைமை அதிகாரி எபல் டயஸ் கூறுகையில், “சமீபத்திய நாட்களில் சிறைகளில் ஏற்படும் வன்முறை மற்றும் கொலைகளைத் தடுப்பதற்கான ராணுவ தலையீட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். எனினும் இந்தச் சம்பவத்தின் காரணமாக தேசிய சிறைச்சாலை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆறு மாதங்களுக்கு வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அமைப்பை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என கூறினார்.

இதேபோல நேற்றிரவு நடைபெற்ற இன்னொரு சம்பவத்தில் கிழக்கு நகரமான மொரோசெலியில் உள்ள லா டோல்வா அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் ஐந்து கைதிகள் மற்றும் ஒரு கும்பலின் உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

கும்பல் வன்முறை மற்றும் தப்பித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு புனர்வாழ்வு மையத்தில் டிசம்பர் 4ஆம் திகதி ஒரு சண்டையில் நான்கு சிறைக் கைதிகள் உயிரிழந்தனர்.

ஹோண்டுராஸின் நெரிசலான சிறைகளில் 21,000இற்க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை தொடர்ந்து நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கிடையில் பயங்கர மோதல்களைத் தொடர்ந்து நாட்டின் சிறைச்சாலைகளை இயக்குவதற்கு ஹோண்டுராஸ் ஆயுதப்படைகள் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...