Main Menu

ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டம் – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத்தாக்குதல்!

ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 45 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வடக்கு மாவட்டமான யுவான் லாங் வழியாக நேற்று(சனிக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

பொலிஸார் எதையும் கண்டு கொள்ளாமல் தாக்குதலாளிகளுடன் கைகோர்ப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை பொலிஸார் மறுத்து வருகின்றனர்.

ஏழு வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பல ஹொங் கொங்கில் நடைபெற்றுள்ளன. குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கக்கூடிய சட்டத்திருத்தம் காரணமாக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த போராட்டங்களினைத் தொடர்ந்து குறித்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது. எனினும், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை, உள்நாட்டு சீர்திருத்தம் மற்றும் ஹொங் கொங்கின் நிர்வாக தலைவர் கேரி லெம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...