Main Menu

வேலூர் பாராளுமன்ற தொகுதியை குறி வைக்கும் பா.ஜ.க.- தேர்தல் பணிகளில் தீவிரம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது. ‌ வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது. இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் வேலூர் வள்ளலாரில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பா.கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், சிறப்பு பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத் தலைவர்கள் மனோகரன் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பங்கேற்று பேசினார். இதில் வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கட்சியை பலப்படுத்துதல், அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க.வை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு சில இடங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் இல்லையென்றால் திட்டத்தை செயல்படுத்த இயலாது. தவிர, திட்டத்துக்கு தேவையான 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே 8 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும். அதேசமயம், இதில் மக்களுக்கு பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும். தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றிட மாநில அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எலெக்ட்ரானிக்ஸ் முறையில் (ஜி.பி.எஸ்.) சுங்கம் வசூலிப்பு முறையை அமல்படுத்தப்படும். சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு விமான சேவைக்கு திறக்கப்படும். இதேபோல், சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்தஇடம் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்பதை மாநில அரசு தெரிவித்தால் அந்த இடத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் விமான நிலையப் பணிகள் மாநில அரசின் ஆலோசனை, விதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பது தொடர்பாக தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வந்தால் அதுகுறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...