Main Menu

வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு!

வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன் தாக்கம் தமிழகத்தில் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அண்டை மாநிலங்களில் இருந்து நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி  மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்படுத்த வருவாய் நிர்வாக ஆணையருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும்,  வருவாய் நிர்வாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும்   தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.

மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சரை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும்இ பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...