Main Menu

வல்லரசுகளை மிரட்டிய தலைவர் குறித்து மெளனம் சாதிக்கும் தேசிய ஊடகங்கள்

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்’இன் உடல் நிலை தொடர்பாக சர்வதேச ரீதியாக பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடகொரிய ஊடகங்கள் மெளனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் தேசிய பாதுகாப்பை சிரம் மேல் ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் பலவற்றின் தற்துணிவை சோதனைக்கு உட்படுத்தியவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன்.

உலகின் பல நாடுகளின் எதிர்ப்புகள், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கைகள் என எதனையும் பொருட்படுத்தாது, பல ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த கிம் ஜொங் உன்’இன் உடல் நிலை தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிம் ஜொங் உன் மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் வடகொரிய தேசிய ஊடகங்கள் இது தொடர்பான எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாறாக கிம் ஜொங் உன்’இன் வழக்கமான புகைப்படங்கள் மற்றும் தேசிய நடைமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் என்பன திகதியிடப்படாமல் அந்நாட்டு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடக தகவல்களின் அடிப்படையில் கிம் ஜோங் உன்’இன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை குறித்த தகவல்கள் நெருக்கமான மூலங்களின் அடிப்படையில் பெறப்பட்டவை என மீள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிம் ஜொங் உன் குறித்து வட கொரிய ஊடகங்கள் சாதிக்கும் மெளனங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பகிரவும்...