Main Menu

ஜப்பானில் பாரிய நிலநடுக்கத்துடன் சுனாமி ஏற்படும் வாய்ப்பு- ஆராய்ச்சிக்குழு எச்சரிக்கை!

ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் 30 மீற்றர் உயரத்துக்கு சுனாமி வடக்கு ஜப்பானை தாக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அரசாங்க ஆராய்ச்சிக் குழு அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஜப்பானின் பசிபிக் கடல் ஆழத்தில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 30 மீற்றர் உயரமுள்ள சுனாமி வடக்கு ஜப்பானில் ஹொக்கைடோவையும் (Hokkaido) வடகிழக்கில் இவாட்டையும் (Iwate) தாக்கும் என அரசாங்க ஆராய்ச்சிக் குழுவால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.

குறித்த வல்லுநர்கள் குழு ஒரு மோசமான சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கையை விடுத்ததுடன், ஜப்பான் கடல் மற்றும் குரில் (Kuril) கடல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாரிய பூகம்பம் நாட்டின் வடக்குப் பகுதிகளை தாக்கலாம் என்று கூறியுள்ளது.

இதுபோன்ற, பூகம்பம் நிகழக்கூடிய நிகழ்தகவைக் கணக்கிடுவது கடினம் என்று குறித்த குழு கூறியிருந்தாலும், ஒவ்வொரு 300 முதல் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பகுதியில் பாரிய சுனாமி நிகழ்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியது.

ஜப்பான் கடல் ஹொக்கைடோ கடற்கரையில் இருந்து ரோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா ப்ரிஃபெக்சரில் (Chiba Prefecture) உள்ள போசோ (Boso Peninsula) தீபகற்பம் வரை செல்கிறது. மேலும் நாட்டின் வடகிழக்கு பிரதான தீவான டோகாச்சியில் (Tokachi ) இருந்து ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள குரில் தீவுகள் வரை குரில் கடல் நீண்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் வடகிழக்கு ஜப்பானை பேரழிவிற்குள்ளாக்கிய 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவை ஜப்பான் கடலை மையப்படுத்தி ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்தமுறை குறித்த குழு, குறிப்பாக சான்ரிகு, ஹிடாகா, டோகாச்சி மற்றும் நெமுரோ பகுதி கடலை மையமாகக் கொண்டு நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என் முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளது.

பகிரவும்...