Main Menu

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலேயே இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார், நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் தெரியப்படுத்தி நீதிமன்ற தடையுத்தரவினை வழங்க முற்படுகையில், பெயர் குறிப்பிட்டவர்கள் அவ்விடம் இல்லாமையால் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

இவ்வாறு பொலிஸார் வருகை தந்து, தடையுத்தரவினை வழங்க முற்பட்டபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதை காண முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர், கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பகிரவும்...