Main Menu

மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விடயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் வரும் 11 முதல் 13ஆம் திகதி வரை சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடி- சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்த கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசியல் விமர்சகர் லோரன்ஸ் பிரபாகர், வெளியுறவுக் கொள்கை நிபுணர் சேஷாத்ரி சாரி, கடற்படை முன்னாள் அதிகாரி சேஷாத்ரி வாசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

லடாக் பகுதியை ஒட்டிய இந்திய- சீன எல்லைப் பிரச்சினை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள், கடல்சார் வளங்களின் மூலம் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்யும் ஒப்பந்தங்கள், சீனாவின் 5-ஜி கொள்கை உள்ளிட்ட விடயங்கள் இந்தப் பேச்சு வார்த்தையில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையே வா்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவார்த்தையின் போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். மேலும் இரு நாடுகளுக்கிடையே உயர்கல்விக்கான மாணவர் பரிமாற்றம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

பகிரவும்...