Main Menu

“மோடியை கண்டாலே மம்தாவுக்கு பயம்..” காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து லோக்சபா தேர்தல் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. லோக்சபா தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், இதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ்நாடு, டெல்லி, உபி என பல்வேறு மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு மேற்கு வங்கம் தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. அங்கே மம்தா பானர்ஜிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறியில் இருந்தது. வேட்பாளர் அறிவிப்பு: இதற்கிடையே நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து 42 லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. மேற்கு வங்கத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்துள்ளதாகக் காங்கிரஸ் சில நாட்களுக்கு முன்பு தான் கூறியிருந்த நிலையில், அதைப் புறக்கணித்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ்- இடதுசாரிகள் ஒரே அணியில் களமிறங்கி பாஜகவுக்கு கடும் சவாலைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறான சம்பவங்கள் அங்கே நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று சொல்லும் மம்தா, காங்கிரஸ் உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு இப்போது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

பதிலடி: இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸின் இந்த அறிவிப்பிற்குக் காங்கிரஸ் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சீட் பகிர்வு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகப் பலமுறை அறிவித்தோம். இது போன்ற தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் என்பது ஒருதலைபட்ச அறிவிப்புகளால் இல்லாமல்.. பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட வேண்டும் என்பதையே காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது. இந்தியா கூட்டணி இணைந்தே பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு” எனப் பதிவிட்டுள்ளார்.

மோடியைக் கண்டால் பயம்: மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி திரிணாமுல் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சீட் பகிர்வு ஒப்பந்தத்திற்காகக் காங்கிரசுக்கு பதிலாகப் பிரதமர் அலுவலகத்திற்கு மம்தா சென்றுள்ளதாக அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் எந்த அரசியல் கட்சிகளும் அவரை போன்ற ஒரு தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி இன்று நிரூபித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால் பிரதமர் மோடி வருத்தம் கொள்வார் என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். இப்படி இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது மூலம் என் மீது கோபம் வேண்டாம் என்ற மேசேஜ்ஜை அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அவர் பாஜகவுக்கு எதிராகப் போராட மறுத்து இருக்கிறார்” என்று சாடியுள்ளார். கடும் போட்டி: இதன் மூலம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs இந்தியா கூட்டணி என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 சீட்களில் மேற்கு வங்கம் 22 இடங்களில் வென்றது.. அதேநேரம் 2014 தேர்தலில் வெறும் 2 சீட்களில் வென்றிருந்த பாஜக, கடந்த முறை 18 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் அங்கே 2 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...