Main Menu

மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப் படுவதே நியாயமானது – ஜனக ரத்நாயக்க

கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தை பொதுமக்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாயின் மின் கட்டணம் 35 வீதத்தால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.  

நேற்றுமுன்தினம் (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீத மின்கட்டண குறைப்புக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் நலன்கருதி 21.9 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால் இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்ட இலாபத்தை அதன் பங்காளர்களான பாவனையாளர்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது கட்டாயம். அது தொடர்பான தெளிவு பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை மின்சார சபை வருமானமானது 62 பில்லியன்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அப்படியாயின் இலங்கை மின்சாரபை பெற்றுக்கொண்டுள்ள சுமார் 95 சதவீத இலாபத்தை பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும். அதனை நேரடியாக மின்கட்டண குறைப்பின் ஊடாகவே வழங்க முடியும். அப்படியாயின் 22 வீதமென்ற மின்கட்டண குறைப்பை 35 வீதமாக குறைப்பதற்கு அரசாங்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நியாயமும் கூட.

கடந்த 2023ஆம் ஆண்டு மின்சார சபையின் ஐந்தொகையில் 60 பில்லியன் ரூபா வட்டித் தொகையானது இலங்கை மத்தியவங்கிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கை மத்திய வங்கியின் வருமான பட்டியலானது 40 பில்லியனாக பதிவாகியுள்ளது. அப்படியாயின் கடந்த ஆண்டு இலங்கை மத்தியவங்கியின் பிரதான வருமானமானது இலங்கை மின்சார சபையிடமிருந்து அறவிடப்பட்டுள்ளமை தெட்டத்தெளிவாக தெரிகிறது. இந்த பெருந்தொகை கட்டணத்துக்கு இலங்கை மின்சார சபையின் ஊழல் மற்றும் முறையற்ற திட்டமிடல்களே மிகப்பிரதான காரணங்களாகும்.

இந்தியா – இலங்கை மின்னணு வர்த்தக உடன்படிக்கை

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இதுபோன்ற எல்லை தாண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் வெற்றிகரமான ஒரு உபாயமாகவே பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்தியாவுடனான மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் கடந்த காலங்களிலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். என்றாலும்கூட இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கையானது அரசியல் தலையீடுகளற்ற வர்த்தக நோக்கத்தை மாத்திரம் முன்னிலை ப்படுத்துவதாக அமையுமென்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். யாரையும் பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்த திட்டம் அமையுமானால் அது இலங்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும் என்றார்.

பகிரவும்...