Main Menu

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு – ஜீவன்

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதியின்  “சௌபாக்கிய நோக்கு” எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா பிரதேச சபை பல்நோக்கு கட்டத்தின் திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ” கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வாழவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணியவும், சுகாதார நடைமுறைகளை எவராவது பின்பற்ற மறுத்தால் அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தவும். அப்போதுதான் கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியும்.

அதேவேளை, வெளியில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்கள் தொடர்பில் அவதானமாகவே இருக்கவேண்டும். அவ்வாறு வருபவர்கள் தோட்டங்களில் உரிய தரப்புகளிடம் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

சிலர் தனிமைப்படுத்தல் நடைமுறையை சிறை தண்டனைபோல் நினைக்கின்றனர். அவ்வாறு அல்ல, உங்களின் பாதுகாப்புக்காகவும், ஏனையோரின் பாதுகாப்புக்காகவுமே தனிமைப்படுத்தல் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, அதற்கு அஞ்சவேண்டியதில்லை. சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் வந்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பும் அதுவே. கொரோனாவால் சிற்சில பணிகள் ஸ்தம்பித்துள்ளன. விரைவில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் நீர், மின்சாரம் என உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவற்றை முழுமைப்படுத்திய பின்னர் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்திய தரப்புக்கும் இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிச்சயம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்போம். ”என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...