Main Menu

மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் – பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் சற்று முன் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்கள் (Crèche), சிறுவர் பாடசாலைகள் (Ecole maternelle, école primaire) , கல்லூரிகள் (Collège), உயர்நிலைப் பள்ளிகள் (Lycée) மற்றும் பல்கலைக்கழகங்களை (Université) “மேலும் அறிவிக்கும் வரை” மூடுவதாக அறிவித்தார்.

மேலும் வைத்தியசாலைக்கு அவசர தேவை கருதி செல்லும் நோயாளிகளை தவிர ஏனைய சாதாரண பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் தமது வைத்தியருடனான சந்திப்புக்களை பிற்போடும் படியும் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிந்தவரைக்கும் மக்கள் ஒன்று கூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளை தேவையேற்படும் பட்சத்தில் நாட்டின் எல்லைகளை மூடுதல் தொடர்பாக ஐரோப்பிய அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடைபெறவிருக்கும் நகரசபைத் தேர்தல் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்பட்ட நகரசபை தேர்தலின் முதலாவது கட்ட வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா வைரசினால் 60,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வீடுகளில் உள்ளனர். அனைத்து ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்குமான இழப்பீட்டை அரசு ஏற்றுக்கொள்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

பகிரவும்...