Main Menu

ஆகஸ்ட் மாதத்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

ஆகஸ்ட் 1 என்பது கோடை விடுமுறையின் இரண்டாம் பகுதியைத் தொடங்குபவர்களுக்கு மட்டும் அல்ல; பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரும் நாளாகும். மின்சாரக் கட்டண உயர்வு, சேமிப்பு புத்தகங்களின் (Livret A, LDDS) வட்டி உயர்வு, அனுமதியில்லாத தொலைபேசி வணிக அழைப்புகளுக்கு தடை உள்ளிட்ட பல மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளன.

1. ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் உயர்வு

அரசின் அறிவிப்பின்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் சராசரியாக 2.5 சவீதமாக உயர்கிறது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 26 யூரோக்கள் கூடுதல் செலவாகும்.

2. Livret A மற்றும் LDDS வட்டி விகிதம் உயர்வு

Livret A மற்றும் LDDS வட்டி விகிதம் 1.5% இலிருந்து 1.7% ஆக உயர்கிறது.

3. அனுமதியில்லாத தொலைபேசி வணிக அழைப்புகள் தடை

ஆகஸ்ட் 11 முதல், நிறுவனங்கள் பொதுவாக வணிக நோக்கத்திற்காக தொலைபேசியில் அழைக்க முடியாது.

விதிவிலக்குகள்:

  • ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தம் தொடர்பான சேவைகள் குறித்து அழைப்பது.
  • வாடிக்கையாளர் முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால் மட்டுமே தொலைபேசியில் அழைக்க முடியும். அனுமதி வழங்கியவர் எந்த நேரத்திலும் அதை ரத்து செய்யலாம்.

அழைக்க அனுமதிக்கப்பட்ட நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை

  • காலை 10:00–13:00
  • பிற்பகல் 14:00–20:00

வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் அழைப்பது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

4. ARS (Allocation de Rentrée Scolaire) உதவித்தொகை வழங்கப்படும்

  • ஆகஸ்ட் 4 – லா ரியூனியன் மற்றும் மயோத்.
  • ஆகஸ்ட் 18 – பிரான்ஸ் (மெய்நிலப்பகுதி), கோர்சிகா, குவாதலூப், கயானா மற்றும் மார்டினிக்.

இந்த உதவி CAF அல்லது MSA மூலம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தானாக வழங்கப்படும்.

குழந்தையின் வயது பாடசாலை தொடங்கும் போது 6 முதல் 18 வயது வரை இருக்க வேண்டும். 16 செப்டம்பர் 2008 முதல் 31 டிசம்பர் 2020 வரை பிறந்திருக்க வேண்டும்.

5. எரிபொருள் உதவி தொடர்கிறது

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் அதிகரித்துள்ளன. அதனை சமாளிக்க அரசு 100 யூரோக்கள் எரிபொருள் உதவித்தொகை வழங்குகிறது.

இது தங்கள் வேலைக்காக அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும்.

தகுதிகள்:

  • வீடு–வேலை இடையே ஒரு வழிக்கு குறைந்தது 15 கி.மீ. அல்லது
  • ஆண்டுக்கு குறைந்தது 8,000 கி.மீ. வேலைக்காக பயணம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி ஜூலை 30 என்பதிலிருந்து ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 1–2, 15–16 மற்றும் 29–30 ஆகிய வார இறுதிகளில் TotalEnergies நிலையங்களில்:

  • பெட்ரோல் – அதிகபட்சம் 1.99 யூரோ/லிட்டர்
  • டீசல் – அதிகபட்சம் 2.25 யூரோ/லிட்டர்

என்ற விலை உச்சவரம்பு அமல்படுத்தப்படும்.

6. Carte Grise வழங்கும் நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்

வாகன பதிவு (Carte Grise) தொடர்பான பணிகளைச் செய்யும் கேரேஜ்கள் மற்றும் வாகன விற்பனை நிலையங்கள் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். இது போலி ஆவணங்கள், அடையாளத் திருட்டு மற்றும் மோசடிகளைத் தடுக்க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகள்:

  • குறைந்தது 3 ஆண்டுகள் வாகனத் துறையில் செயல்பட்டிருக்க வேண்டும்.
  • SIV (வாகன பதிவு முறைமை) அணுகலை புதுப்பிக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச பணிச்சுமை (transactions) அளவை பூர்த்தி செய்ய வேண்டும்.

7. பயிற்சி (Apprentissage) மற்றும் தொழில்முறை பயிற்சி ஒப்பந்தங்கள் மீது கடுமையான கண்காணிப்பு

ஆகஸ்ட் 1, 2024 முதல் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு, OPCO (திறன் மேம்பாட்டு அமைப்புகள்) அதிகப்படியான சரிபார்ப்பை மேற்கொள்ளும். ஒப்பந்தம் சட்ட விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அதற்கான நிதியுதவியை OPCO நிராகரிக்கலாம்.