Main Menu

மருதனார்மடம் சந்தையில் 136 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள் என 394 பேரின் மாதிரிகள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் பெறப்பட்டன.

இன்று பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஏனையவை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட வேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...