Main Menu

மரணக்காடாகும் அமெரிக்கா: உலகம் முழுவதும் 17 இலட்சம் பேர் பாதிப்பு- ஒரு இலட்சம் கடந்து உயிரிழப்பு!

உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கோராத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 35 பேர் மடிந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 734 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.

அத்துடன் 16 இலட்சத்து 99 ஆயிரத்து 632 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்தமான 49 ஆயிரத்து 831 பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனைவிட 3 இலட்சத்து 76 ஆயிரத்து 330 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா பெரும் மனித இழப்பைச் சந்தித்துள்ள நிலையில் 5 இலட்சத்து 2 ஆயிரத்து 876 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாாகியுள்ளனர்.

நேற்று மட்டும் 33 ஆயிரத்து 752 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 747 ஆகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில், நியூயோர்க் நகரம் மாநிலமே பெரும் மனித அழிவை எதிர்கொண்டுள்ள நிலையில் நேற்று அங்கு மட்டும் 777 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஏனைய உலக நாடுகளை விடவும் நியூயோர்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு மட்டும் 7 ஆயிரத்து 844 பேர் மரணித்துள்ளனர்.

மேலும் நியூஜெர்ஸி மாநிலத்தில் நேற்று 232 பேர் மரணித்துள்ளதோடு, மிச்சிகன் மாகாணத்தில் 205 பேரின் மரணம் பதவாகியுள்ளது.

இதேவேளை, இதுவரை இல்லாத அளவுக்கு பிரித்தானியாவில் நேற்று மட்டும் 980 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு மொத்தமாக 8 ஆயிரத்து 958 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்று மட்டும் அங்கு 8 ஆயிரத்து 681 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு 73 ஆயிரத்து 758ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் இதுவரை 344 பேரே குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஐரோப்பிய நாடான பிரான்ஸில் தொடர்ந்தும் மரணங்கள் உச்சக் கட்டத்திலேயே காணப்படுகின்ற நிலையில் அங்கு நேற்று மட்டும் 987 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமான அங்கு 13 ஆயிரத்து 197 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், பிரான்ஸில் நேற்றும் புதிதாக 7 ஆயிரத்து 120 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 869 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக அளவில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று மட்டும் 570 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 849 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், புதிய நோயாளர்களின் வரவு சற்று குறைந்துள்ள நிலையில் நேற்று 3 ஆயிரத்து 952 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 577 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு 30 ஆயிரத்து 455 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைவிட ஸ்பெயினில் நேற்றுமட்டும் 634 பேர் மரணித்துள்ளதுடன் மொத்தமாக 16 ஆயிரத்து 81 பேரின் மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று 5 ஆயிரத்து 51 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 273 பேர் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்திலும் நேற்று அதிக உயிரிழப்பாக 496 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 19 பேர் மரணித்துள்ளதுடன் 26 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட ஜேர்மனியில் நேற்று மட்டும் 129 பேரின் மரணங்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 736 ஆக உள்ளது. இதனைவிட நெதர்லாந்திலும் நேற்று 115 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்ததாக 2 ஆயிரத்து 511 பேர் மரணித்துள்ளனர்.

இதனைவிட ஐரோப்பிய நாடுகளான சுவீடனில் நேற்று மட்டும் 77 பேர் மரணித்துள்ள அதேவேளை, சுவிற்சர்லாந்தில் 54 பேரும், ஆஸ்ரியா மற்றும் அயர்லாந்தில் தலா 24 பேரும் ஒரேநாளில் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக நேற்று 4 ஆயிரத்து 245 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் 70 ஆயிரத்து 63 ஆக மொத்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், குறித்த நாடுகளில் நேற்று மட்டுத் 41 ஆயிரத்து 257 பேர் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 8 இலட்சத்து 20 ஆயிரத்து 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் இன்னும் 30 ஆயிரம் பேர்வரை மொசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 782 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஆசிய நாடுகளில் நேற்று 328 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதிகபட்சமாக ஈரானில் 122 பேரிள் மரணங்களும் துருக்கியில் 98 பேரின் மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும், இந்தியாவில் நேற்று 22 பேரும், பிலிப்பைன்ஸில் 18 பேரும் மரணித்துள்ளதுடன் இந்தொனேஷியாவில் 26 பேர் மரணித்துள்ளனர்.

ஆசியாவில் மொத்தமாக இதுவரை 10 ஆயிரத்து 224 பேர் மரணித்துள்ளதுடன் நேற்று 11 ஆயிரத்து 144 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்த மாக 2 இலட்சத்து 75 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆசியாவில் 77 ஆயிரத்து 455 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இதேவைளை, சீனாவில் நேற்று ஒருவர் மரணித்துள்ள நிலையில், புதிய நோயாளர்களாக 42 பேர் பதிவாகியுள்ளமை குறிப்படத்தக்கது.

பகிரவும்...