Main Menu

மத விழாக்களில் கூடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டாம் – மத்திய அரசு

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், மத விழாக்களில் மக்கள் கூடவும், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதிக்கவேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளையிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தில் இருந்து இன்னும் 3-வது கட்டத்துக்கு செல்லவில்லை. 3-வது கட்டத்துக்கு சென்றுவிட்டால் கொரோனா பரவும் வேகமும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரிக்கும். அப்படி ஒரு நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக உள்ளன.

அதேசமயம், கொரோனாவின் ஆபத்தை உணராமல் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் நெருக்கமாக செல்வதை காண முடிகிறது.

இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை வருகிறது. 144ஆம் திகதி தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இதேபோல் பைசாகி, விஷூ, ரொங்காலி பிகு, மகா விஷுப சங்கராந்தி, பொய்லா பொய்சாக் போன்ற விழாக்களும் இந்த மாதம் கொண்டாடப்பட இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், இதுபோன்ற சமூக மற்றும் மத விழாக்களில் மக்கள் கூடுவதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பேரழிவு மேலாண்மை சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் பரவாமல் இருக்க கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...