Main Menu

மத்திய அரசை கண்டித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடைபெறும் என 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதற்கமைய குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவிப்பில், “தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த அறிவித்தலை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

தொழிலாளர் மாநாடு நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர் சட்டங்களை சிதைத்து வருவதுடன், தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது.

அரசு பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டது. தேசநலனுக்கும் வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துக்களை தனியார் மயமாக்குவதிலும் விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.

எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் மொத்தம் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...