Main Menu

மண்டேலா சிறை அறை சாவியை ஏலம் விடும் முடிவுக்கு தென் ஆப்பிரிக்கா கண்டனம்

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா ராபன் தீவுகளில் உள்ள சிறையில் 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார்.

இதற்கிடையே, நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனம் ஜனவரி 28-ம் தேதி இந்த ஏலத்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏலம் நடத்துவதை நிறுத்தவேண்டும் என கர்ன்சேஸ் நிறுவனத்தையும், கிறிஸ்டோ பிராண்டையும் அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கலாசார மந்திரி நாதி தெத்வா கூறுகையில், இந்த ஏலம் குறித்து எங்கள் அரசோடு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.

பகிரவும்...