Main Menu

மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் நினைவுநாளை நடத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் நீதிமன்றில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யபட்டது.

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

அத்துடன் கொவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது வழக்கின் பிரதிவாதிகளான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், கே.சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, ஏனைய பிரதிவாதிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருற்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...