Main Menu

மக்கள் பேராதரவுடன் வெற்றிப் பயணம்… ராகுல் காந்தியின் யாத்திரை இன்னும் பலம் பெறும்: விஜய் வசந்த் வாழ்த்து

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், 100-வது நாளை எட்டியதையடுத்து, காங்கிரசார் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:- பாசிச சக்திகளிடம் இருந்து இந்தியாவை விடுவித்து இந்தியர்களை ஒன்றிணைக்கும் நல்நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று நமது கன்னியாகுமாரியில் இருந்து தொடங்கிய #இந்திய_ஒற்றுமை_பயணம் இன்று நூறாவது நாளை எட்டி இருக்கிறது. இந்தப் பயணம் வெற்றி அடையுமா என்று சந்தேகம் எழுப்பியவர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளுக்கு நாள் மக்கள் பேராதரவுடன் இது ஒரு வெற்றிப் பயணமாக சென்று கொண்டிருக்கிறது.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் இணையும் இந்த யாத்திரையில் இந்தியாவின் மிக முக்கிய நபர்களும் கலந்து கொண்டு தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நடந்து செல்கின்றனர். இந்த யாத்திரையை வழிநடத்திச் செல்லும் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மனவலிமை பாராட்டப்பட வேண்டியது. இரண்டு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றபோதும், ஓட்டுகள் வெல்வதை விட இரண்டு மாநிலங்களை வெல்வதை விட இந்தியாவை ஒன்றிணைப்பதே முக்கியம் என்ற குறிக்கோளுடன் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்த யாத்திரையில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பிரத்தியேக பாராட்டு மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வெயில் என்றும் மழை என்றும் பனி என்றும் பாராமல், கால்கள் தளர்ந்து விடாமல், மனம் சோர்ந்து விடாமல் இந்தியாவை ஒன்றிணைப்பது லட்சியம் என்ற குறிக்கோளுடன் நடந்து செல்லும் இவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள். இந்தப் பயணம் வெற்றிகரமாக கடந்து சென்ற அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பை மட்டும் தூவி செல்லும் இந்த யாத்திரை இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வரும் நாட்களிலும் இந்த பயணம் இன்னும் பலம் பெற்று சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.

பகிரவும்...