Main Menu

பொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்

பொதுக்குழு கூடும் வரையில் தி.மு.க. பொருளாளராக துரை முருகனே நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் M.K.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1977ஆம் ஆண்டு முதல் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த க.அன்பழகன் (98) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி காலமானார்.

இதையடுத்து, தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் பரவலாக எழுந்தது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.

பொதுச்செயலாளார் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரைமுருகன் அளித்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், கொரோனா பாதிப்பில் நாடு முழுவதும் சிக்கியதால் தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளான பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு தள்ளிப்போனது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழல் உள்ளது.

எனவே, பொதுக்குழு கூடும் வரையில், துரைமுருகனின் ராஜினாமா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அவரே தொடர்ந்து பொருளாளர் பதவியில் நீடிப்பார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பகிரவும்...