Main Menu

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு உதவுமாறு மோடிக்கு அன்புமணி வேண்டுகோள்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

அதாவது, முதலில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட பிரதமர், அவரது பணி சிறக்க விருப்பம் தெரிவித்தார்.

தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயற்படுத்த வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அதனைக் ஏற்றுக்கொண்ட பிரதமர், ‘அடுத்து வரும் 5 ஆண்டுகளில் பாசனத்திட்டங்கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன்’ என்று உறுதியளித்தார்.

பின்னர் தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் மனநிலை ஆகும். ஆகையால் பிரதமர் இவ்விடயத்தில் உதவி செய்ய வேண்டுமென கோரினார்.

இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக பா.ம.க.தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...