Main Menu

பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!

லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகத்திற்கு அருகிலுள்ள அலுவலகங்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இந்த தீவிபத்தினால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், கடந்த ஒகஸ்ட் 4ஆம் திகதி வெடித்ததில் சுமார் 191பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...