Main Menu

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனை அளிக்கிறது- நீதிபதிகள்

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளதென உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை- இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கண்ணு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “இராமநாதபுரம் ஆட்சியரிடம் 1600 பதிவு செய்யாத புலம் பெயர் தொழிலாளர்களின் பட்டியல் அளிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் உதவி கிடைக்கவில்லை.

எனவே, பதிவு செய்யப்படாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசின் உதவி வழங்க உத்தரவிட வேண்டும்”என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அரச சட்டத்தரணி ஆயிரம் செல்வக்குமார் வாதிடுகையில், “தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன” என்றார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், “இவ்வளவு நாளாக புலம்பெயர் தொழிலாளர்களைப் பணிக்காகப் பயன்படுத்தி விட்டு, இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பதை ஏற்க முடியாது. கேரள மாநிலத்தை விட்டு புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியே செல்ல மறுக்கின்றனர்.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளது. இது தொடர்ந்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கும்” என்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

பகிரவும்...