Main Menu

புதிய அரசாங்கத்தின் வரவு , செலவுத் திட்டத்திற்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – சஜித்

தேர்தல் காலத்தின்போது, வழங்கிய வாக்குறுதிக்கமைவாக வரவு- செலவுத் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவருமாக இருந்தால், அதற்கு பூரணமான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிரில்லவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமுர்த்தி திட்டத்தோடு, அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. இதனை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி பெற்றத் தரப்பினர் உடனடியாக வரவு- செலவு திட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நாடாளுமன்றில் நாம் பெரும்பான்மையாக இருப்பதால், நாம் வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் என்று சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் ஒருபோதும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம்.

மக்களின் நலனுக்காக, நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிட அதிக ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கவும் தயாராகவே இருக்கிறோம்.

எனினும், அந்த வரவு- செலவுத் திட்டத்தில் உள்ள சலுகைகள், தேர்தல் காலத்தின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாக அமைய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தெளிவாக இருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எந்தவொரு முரண்பாடுகளும் கிடையாது. எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருந்தாலும், ஜனவரி 3ஆம் திகதியன்றே அது உறுதியாகும். அதுவரை இந்த விடயத்தில் அமைதியாக இருப்பதுதான் சிறந்தது என நான் நினைக்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...