Main Menu

பிரெக்ஸிற் குறித்த நான்காவது வாக்கெடுப்புக்கு தயாராகிறார் பிரதமர் மே

பிரெக்ஸிற் விவகாரம் குறித்து நாடாளுமன்றில், 4 ஆவது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மே பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் நடைபெற்ற 3 வாக்கெடுப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிற்;’ நடவடிக்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றில் முதல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பானது, 230 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து, சில திருத்தங்களுடன் மேற்கொண்ட 2 வாக்கெடுப்பும் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர், இரு தரப்பினரிடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம், மூன்றாம் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோல்வியை தழுவியது.

இந்த ஒப்பந்தத்தை ஆதரித்து 344 வாக்குகளும், எதிர்த்து 286 வாக்குகளும் வழங்கப்பட்டன.

இந்த தொடர் தோல்விகள் தெரேசா மே அரசாங்கத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே தற்போது நான்காவது வாக்கெடுப்புக்கும் பிரதமர் தயாராகி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், பிரெக்ஸிற் விவகாரத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள போதிலும், தற்போது இதுதொடர்பாக பிரதமர் உறுப்பினர்களுடன் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின், தெரேசா மே தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையலேயே, பிரதமர் நான்காவது வாக்கெடுப்புக்கான தயார் படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்.

எவ்வாறாயினும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது, நாடாளுமன்றின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள பிரதமர் தொடர்ந்தும் முயற்சிப்பார் என்றே அவருக்கு நெருக்கமானத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

பகிரவும்...