Main Menu

பிரெக்ஸிற்றுக்கு பின்னர் வரிகளைக் குறைப்பதற்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுதி

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் முதல் 100 நாட்களுக்கான தமது திட்டங்களை வெளியிட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி, பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவதற்கும் பிரெக்ஸிற்றுக்கு பின்னரான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடுவதற்கும் உறுதியளித்துள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும், தேசிய காப்பீட்டு வரம்பை £9,500 ஆக உயர்த்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் தேசிய சுகாதார சேவைக்கான நிதி ஆகியவையும் அடங்குமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை கொன்சர்வேற்றிவ் கட்சி அரசாங்கத்தால் ஏற்படுத்தமுடியும் என்பதில் தனக்கு ஒரு சந்தேகமும் இல்லை என நிதியமைச்சர் சாஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

முதல் 100 நாட்களுக்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் திட்டங்களில், தேசிய காப்பீட்டு வரம்பை உயர்த்துவது, கடுமையான வன்முறை மற்றும் பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ரத்துச்செய்தல் குடியேறிகளுக்கான தேசிய சுகாதார சேவைக் கட்டணத்தை அதிகரித்தல் ஆகியன அடங்கியுள்ளன.

அதேபோன்று ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் ஏனைய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பல சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் ஒவ்வொரு மாணவருக்குமான நிதியை உயர்த்துவதற்கான சட்டம், 2023 க்குள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சுகாதார சேவைக்கு £33.9 பில்லியன் நிதி வழங்குவதற்கான சட்டம் மற்றும் புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறைக்கான சட்டம் ஆகியவை அடங்குகின்றன.

லிபரல் ஜனநாயகக் கட்சி இந்தத் திட்டங்களை முழுமையான கற்பனை எனத் தெரிவித்துள்ள நிலையில் கொன்சர்வேற்றிவ் கட்சியினரால் மீண்டும் தோல்வியையே கொடுக்கமுடியும் என்று தொழிற்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை பிரதமர் ஜோன்சனை டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து வெளியேற்ற இன்னும் ஏழு நாட்களே உள்ளன என்று ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...