Main Menu

குடும்பங்களுக்கு வருடத்துக்கு £6,700 க்கும் அதிகமான சேமிப்பை வழங்குவதற்கு தொழிற்கட்சி உறுதி

டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டு மக்களின் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு £6,700 க்கும் அதிகமாக சேமிப்பதற்கு தொழிற்கட்சியின் உண்மையான மாற்றத்திற்கான திட்டம் உதவுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜோன் மக்டோனல் தெரிவித்துள்ளார்.

யுனிவர்சல் கிரெடிட் போன்ற திட்டங்களை மாற்றியமைப்பதற்கும் ஒரு மணித்தியாலத்துக்கான வாழ்க்கை ஊதியத்தை £10 ஆக உயர்த்துவதற்கும் மெக்டோனல் உறுதியளித்துளளார். இந்த திட்டங்கள் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆண்டுக்கு £6,000 வரை ஊதிய உயர்வு வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் கொன்சர்வேற்றிவ் மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சிகளின் செயலற்ற தன்மை மற்றும் பொருளாதார முறைகேடு ஆகியவற்றால் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவே அதிகரித்து வரும் வறுமை மற்றும் வீடற்ற தன்மைக்கு காரணமெனவும் மக்டோனல் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானிய எரிசக்தி நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கான தொழிற்கட்சியின் திட்டம் சராசரி பிரித்தானிய குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு £142 சேமிப்பை வழங்குமென அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் திறமையான எரிசக்தி விநியோகங்களைக் கொண்ட வீடுகளை மறுசீரமைப்பதற்கான திட்டம் சராசரி வீட்டு செலவை ஆண்டுக்கு £400 க்கும் மேல் குறைக்குமெனவும் மக்டோனல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவச குழந்தை பராமரிப்பு ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சராசரியாக £3,000 மிச்சப்படுத்தும் எனவும் அனைத்து ஆரம்ப பாடசாலை குழந்தைகளுக்குமான இலவச பாடசாலை உணவு வீட்டு செலவை £400 க்கும் மேல் குறைக்குமென அவர் தெரிவித்துளளார்.

பகிரவும்...