Main Menu

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை!

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது.

லண்டன் பல்கலைகழக கல்லூரி (யு.சி.எல்) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் பாரம்பரிய மக்களின் இறப்பதற்கான சராசரி ஆபத்து 3.29 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்க கறுப்பின பின்னணியில் இது 3.24 மடங்கு அதிகமாகவும், பங்களாதேஷுக்கு 2.41 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

கறுப்பின கரீபியன் சமூகங்கள் 2.21 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்திய சமுதாயம் 1.7 மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் வெள்ளை மக்களுக்கு குறைந்த இறப்பு அபாயமே உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, லண்டன் பல்கலைகழக கல்லூரியின் டொக்டர் டெலன் தேவகுமார் கூறுகையில், “ சமநிலையாக இருப்பதற்குப் பதிலாக, கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இனக் குழுக்களில் கொவிட்-19 ஏற்படுத்தும் இறப்புக்கள், விகிதாசாரத்தில் அதிகமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது” எனக் கூறினார்.

மேலும், இந்த மரணங்களுக்கு வழிவகுக்கும் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார காரணிகள் மற்றும் சுகாதாரத்துக்கான தடைகளை சமாளிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பகிரவும்...