Main Menu

பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்!

மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார்.

இவரது வெற்றியானது வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள  கடுமையான பதிலையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறான வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதமே டொனால்ட்  ட்ரம்ப் போன்றவர்கள் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது.

ஆட்சி மாற்றத்திற்கான சமிக்கைகள் முன்னர் நெதர்லாந்தில் காணப்பட்டாலும் கூட, தற்போது பிரான்சில் வலதுசாரிக் கட்சியை தேர்தலில் வென்று மக்ரோன் வெற்றி பெற்றதன் மூலம் பிரான்சியர்களும் தமது நாட்டில் மறுமலர்ச்சி ஒன்று ஏற்பட வேண்டும் என்பதை நிரூபித்துள்ளனர். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இந்த மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை எனினும் கருத்தியல் சார் யுத்தங்கள் இங்கு ஏற்படும் போது இங்கு இலகுவாக இந்த மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

பழைய அரசியல் ஒழுங்குகள் சட்டரீதியற்றதாக மாறியுள்ள நிலையில் மக்ரோனின் தேர்தல் வெற்றியானது ஜனநாயகம் மீளுருவாக்கத்திற்கான ஒரு சான்றாக அமைகிறது. பிரான்சின் முன்னாள் அதிபர் கொலண்டின் சோசலிச அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சராகப் பணிபுரிந்த மக்ரோன் ஒரு ஆண்டிற்கு முன்னர் தனது முயற்சியில் En Marche என்கின்ற அரசியற் கட்சியை உருவாக்கினார்.

பிரான்சின் இரு பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சியின் பிரான்கொய்ஸ் பில்லியன் மற்றும் சோசலிசக் கட்சியின் பெனொய்ற் கமோன் ஆகியோர் முதலாவது சுற்றுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆறு சதவீத வாக்கு வித்தியாசத்தில் கமோன் வெற்றி பெற்றார்.

திருமதி லீ பெனின் பொருளாதார பாதுகாப்புவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரான்சில் குடியேறுவதை எதிர்த்து இவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை எதிர்த்து மக்ரோனால் முன்வைக்கப்பட்ட நடுநிலைவாத, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான மற்றும் பூகோளமயமாக்கல் தொடர்பான காத்திரமான பரப்புரையானது இவர் பிரான்சில் தற்போது நடந்து முடிந்த இராண்டாவது சுற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காரணமாகியது. இவரது தேர்தல் வெற்றியானது இனவெறி மிக்க தேசியவாதத்திற்கு எதிரான தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியாகவே நோக்கப்படுகிறது.

அரசியல் நிறுவகங்கள் செயற்படாதிருத்தல் என்பது எம்மைப் போன்ற நாடுகளுக்கு மட்டும் தனித்துவமான ஒரு பிரச்சினையல்ல. பிரான்சின் அரசியலானது முடக்கப்பட்டிருந்தது. 1970களில் பிரித்தானியாவின்  ஜனநாயகம் முடக்கப்பட்டிருந்தது போன்று அண்மையில் பிரான்சின் ஜனநாயகமும் செயலிழந்து காணப்பட்டது.

உள்நாட்டில் முடக்கம் ஏற்படும் போது அதற்கு சாதாரண தீர்வுகளை எட்டும் நிலை பொதுவாகக் காணப்படுகிறது. இது அரசியல் நிலைமை மேலும் தீவிரமாவதற்கு வழிவகுக்கிறது. இதுவே  டொனால்ட் ட்ரம்ப்பின் அமெரிக்காவிலும், எர்டோகனின் துருக்கியிலும், ஜெறேமி கொர்பினின் தொழிற்கட்சியிலும் இன்று நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் ஜெறோமி கொர்பினின் தொழிற்கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. சிக்கலான தீர்வுகளுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் வினைத்திறன் மிக்க தீர்வுகளை எட்டுவதற்கு ஆத்மார்த்தமான தேடல்களும் நடுநிலையான அணுகுமுறையும் அனைத்து அரசியல் நிறுவகங்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

french election

பிரான்ஸ் தனது அரசியல் கலாசாரத்தின் குறித்த சில பாரம்பரிய பண்புகளுக்கு அப்பால் அதிசயம் ஒன்றை நிகழ்த்தலாம். எடுத்துக்காட்டாக, தனது புதிய கட்சியானது அடுத்து வரும் நாடாளுமன்றில் போட்டியிடும் தனது வேட்பாளர்களில் 50 சதவீதத்தினரை சிவில் சமூகத்திலிருந்தும், மாணவச் செயற்பாட்டாளர்கள், தொழில் வல்லுனர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யவுள்ளதாக மக்ரோன் தற்போது கூறுகிறார். ‘அரசியல் செயலிழந்தமையால் எமது அரசியல் முறைமையானது மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும்,  இவ்வாறான பாதிப்புக்களுக்குத் தீர்வு காண்பதற்கான எமது அரசியலின் திறனானது   அரசியல் நிறுவகங்கள் மற்றும் அரசியல் கலாசாரம் போன்றவற்றின் செயற்பாட்டின் மூலம் மிகத் தீவிரமாக சமரசம் செய்யப்படுகின்றன.’ என மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஜனநாயகத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் மூலம் எமது அரசியலானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறிலங்காவிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் காங்கிரஸ் கட்சி மற்றும் அரசியல் என்பது குடும்ப விவகாரமாக மாறியுள்ள இந்திய மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சிகள் போன்றவற்றிலும் இவ்வாறான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

சிறிலங்காவில் முன்னர் நிலவிய நிலப்பிரபுத்துவக் கலாசாரத்தின் எஞ்சியுள்ள விளைவுகளானது சிறிலங்காவின் தேர்தல் வாக்களிப்பு முறைமையிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருக்கவில்லை. அதிகாரத்துவமானது தந்தையிடமிருந்து மகனுக்கும் அல்லது கணவனிடமிருந்தும் மனைவிக்கும் கைமாறுவதென்பது பொதுவானது. ஆனால் இது அரசியல் பிரதிநிதித்துவம் எனப் பார்க்கின்ற போது சிக்கலான விடயமாகும்.

இவ்வாறு குடும்பத்திற்குள் ஆட்சி கைமாற்றப்படும் போது திறமையுள்ளவர்களுக்கான கதவுகள் மூடப்படுகின்றன. தேர்தல் வேட்பாளர்கள் எவ்வித தகுதிகாண் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படாதவிடத்து, இதில் போட்டியிட்டு வெற்றி பெறும் பெரும்பான்மை வேட்பாளர்கள் மிகக் குறைந்த திறமையுடனேயே காணப்படுகின்றனர்.

சிறிலங்காவின் அரசியற் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் தமது தலைமைக்கு விசுவாசமாகச் செயற்படுகின்றனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மெதமுலான கார்ல்டன் இல்லமானது  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டையாக இருந்தமை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறான அதிகாரத்துவம் மிக்க ஒரு ஆட்சியாளர் பின்னர் மாகாண தலைமைத்துவத்திற்கு கீழிறக்கப்பட்டார். ஆகவே அரசியல் எந்தவொரு மட்டத்திலுள்ள எந்தவொரு தலைவரும் அவரது துதிபாடும் விசுவாசிகளுக்கு கடவுளின் அவதாரமாகத் தென்படுகிறார்.

இளைஞர்கள் அரசியல் தலைமைத்துவத்தைப் பெறுவதற்கான கற்கைநெறியைக் கற்பிக்கும் நிறுவகங்கள் சிறிலங்காவில் காணப்படவில்லை. சிறிலங்காவின் பல்கலைக்கழக அரசியலானது அரசியல் சார் கௌரவத்தையும் பாதுகாப்பையும் மட்டுமே வழங்குகின்றது. ஆகவே இளம் அரசியல் தலைவர்களை உருவாக்கக் கூடிய முறைமை ஒன்றை சிறிலங்கா கொண்டிருக்க வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறான தேவை நிறைவேற்றப்படாவிட்டால், சிறிலங்காவின் அரசியல் எதிர்காலம் என்பது பரந்தளவில் மக்கள் மத்தியில் மறைக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படும். இறுதியாக, தேர்தலில் போட்டியிடுபவர்களின் சமூக, பொருளாதார, கலாசாரக் காரணிகளில் பிற்போக்கான அரசியல் கருத்துக்களை பரந்தளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது சிறிலங்காவிற்கு மட்டும் தனித்துவமானதல்ல. பிரான்சிலும், இந்த நிலை காணப்படுகிறது.

பிரான்சில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மக்ரோனிற்கு நகர்ப்புற மக்கள் அதிகளவான வாக்குகளை வழங்கிய அதேவேளையில் புறநகர்களிலும் கைவிடப்பட்ட தொழில் நகரங்களிலும் வாழும் மக்கள் திருமதி லீ பென்னிற்கு தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். இதேபோன்றே சிறிலங்காவின் தேர்தல் முறைமையும் காணப்படுகிறது.

காலிமுகத்திடலில் கூடும் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டில் அரசியல் பிளவை ஏற்படுத்த முனையலாம். தாராளவாத ஜனநாயகமானது தனது சொந்த மக்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டிய தேவையேற்படலாம். குறிப்பாக ஒரு போத்தல் மதுபானத்திற்காகவும் ஆயிரம் ரூபா பணத்திற்காகவும் கொழும்பு வரை மக்கள் பயணித்திருந்தனர்.

இவ்வாறான தனது சொந்த மக்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாராளவாத ஜனநாயகத்திற்கு சிலவேளைகளில் ஏற்படுகிறது. எனினும், இவற்றை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்காவானது பரம்பரையான, ஒதுக்கித் தள்ளும் பண்பைக் கொண்ட, துதிபாடும் அரசியல் நிறுவகங்களில் முதலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படுத்தப்படாதவிடத்து, ராஜபக்சவிற்கும் மற்றவர்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.

வழிமூலம்       –  Daily mirror
ஆங்கிலத்தில்  –  Ranga Jayasuriya
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...