Main Menu

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரணத் தண்டனை விதித்து  பெஷாவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பர்வேஸ் முஷரப், பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1999ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவராவார். இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

இதன்போது அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் முஷரப்புக்கு மரணத் தண்டனை விதித்து, நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தனர்.

தேசத்துரோக வழக்கு விசாரணை தொடங்கியபோது, மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016ஆம் ஆண்டு டுபாய் சென்ற முஷரப், அங்கேயே தங்கியிருந்து  சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...