Main Menu

பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி) வழங்க சர்வதேச நிதியம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நிதியத்தின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரதமர் இம்ரான்கானின் நிதி ஆலோசகரான அப்துல் ஹபிஸ் ஷேக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருகிறது.

ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அன்னிய செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

எனவே, வெளிநாட்டு கடன் பொறுப்பு தொடர்பாக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையின் அளவில் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்த சூழலை சமாளிக்க அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 6 பில்லியன் டாலர்களை பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியத்தின் தலைமைக்குழு ஒப்புதல் அளிக்கும் என நம்பிக்கை உள்ளது.

அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் 2 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவியாக பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...