Main Menu

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்!

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் மாத்திரமன்றி பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். கடற்படை மற்றும் விமானப் படையின் பேச்சாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றுவாhகள். வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 9 ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மறைத்துவைத்திருந்த சில ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டன. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளே காத்தான்குடி – ஆறு பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபரான தெஹிவளைஇ கல்விகாரை வீதியைச் சேர்ந்த புஹாரி மொஹம்மட் ராபிக் என்பவரை கொம்பனிவீதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 10, மருதானை, டி. பி. ஜாயா வீதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி சந்தேக நபரின் தனிப்பட்ட அலுவலகத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 83 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தையும், 97 பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

சந்தேக நபரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள சொகுசு வீடொன்றையும், வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவையும், நிதிகொடுக்கல் வாங்கல்களையும் பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹம்மட் அலியார் என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

60 வயதுடைய  இந்த சந்தேகநபர் பயங்கரவாதிகளினால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயன்படுத்திவந்த மறைவிடம் அல்லது பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அன்றாட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமான விசேட நடவடிக்கைகளை கடற்படை ஆரம்பிக்கும் என்று கடற்படைப் பேச்சாளர் லெப்ரினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்வின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தவதற்கு விமானப் படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனவிரத்ன எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

பகிரவும்...