Main Menu

மக்கள் பிரச்சினைகளை பேசாமல் மோடி அவதூறான வி‌ஷயங்களை பேசுகிறார்- பிரியங்கா பிரசாரம்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி பங்களாவை விட்டு வெளியே வரவில்லை.

இப்போது தேர்தலில் வந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய போது தங்களிடம் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறியது.

ஆனால் பெரும் தொழில் அதிபர்களின் பல கோடி ரூபாய் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது?

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிபடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பேச மட்டுமே செய்வார்கள். எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோள் மக்களுக்கு நன்மை செய்வது அவர்களின் நோக்கமல்ல.

நமது பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் பாகிஸ்தான் குறித்து கடுமையாக சாடி பேசுவார். மக்கள் பிரச்சினைகளை பேசாமல், மற்றவர்கள் குறித்து அவதூறான வி‌ஷயங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்.

மக்களிடம் வாக்கு என்று ஒரு வலிமையான சக்தி உள்ளது. அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. எனவே அனைவரும் நன்கு யோசித்து நமக்கு நன்மை செய்வது யார்? என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

பகிரவும்...