Main Menu

நீல நிறச் சீருடை உலகப் பொது: அரசாங்கத்தின் தலையீடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது- ஐங்கரநேசன் எடுத்துரைப்பு

காவல்துறைக்குப் பயன்படுத்தப்படும் நீலச் சீருடை உலகப் பொதுவானது எனவும் மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இவ்விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகர காவல் படை உருவாக்கியமை மற்றும் சீருடை வடிவமைப்பு குறிப்பு பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடைகள் அவர்களுக்கே உரித்தான தனித்துவமான வரிகளை அடையாளமாகக் கொண்டவை. ஆனால், காவல்துறைக்கு அவர்கள் பயன்படுத்திய நீல நிறச் சீருடைகள் உலகப் பொதுவானவை.

காக்கிச் சட்டைகள் மக்களின் மனங்களுக்கு அந்நியப்பட்டதாக உள்ளதால் மனங்களுக்கு மிகவும் நெருக்கமான உளவியல் நட்புமிக்க நீல நிறத்தைப் பெரும்பாலான நாடுகளில் காவல்துறையும் தனியார் பாதுகாப்புத் துறையும் இதர நிறுவனங்களும் சீருடைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், யாழ். மாநகர சபை நீல நிறச் சீருடையைத் தெரிவு செய்ததைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக அரசாங்கம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமானவை. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் உள்ளூராட்சிச் சபைகளின் சுயாதீனத்தில் மாகாண சபைகள் தலையிடுவதில்லை. இந்நிலையில் மாகாண சபையின் கீழுள்ள மாநகர சபையின் சீருடை விடயத்தில் காவல்துறையின் மூலம் அரசாங்கம் தலையிடுவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது.

சீருடையை வடிவமைத்த விடயத்தில் ஏதேனும் நிர்வாக ரீதியான முறைகேடுகள் இருப்பின் உள்ளூராட்சித் திணைக்களமே அதற்கான விசாரணையை மேற்கொள்ள முடியும். மாகாண சபைகள் இயங்காத நிலையில் ஆளுநர் இவ்விடயத்தில் தலையிட்டிருக்க முடியும்.

இதைத்தாண்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இந்த விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்குப் பேரினவாத அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் கட்சிகள் இதனை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், தங்களுக்கு இடையே முரண்பாடுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ் தேசியக் கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலையை வேண்டியும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...