Main Menu

நிவாரணப் பணிகளையும் அரசாங்கம் தனது அரசியல் சுய லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றது – சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளைக்கூட, அரசாங்கம் தனது அரசியல் சுயலாபத்திற்காகத் தான் பயன்படுத்துகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நானும், அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்தாலும், இதற்கு முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி தான் ஏற்க வேண்டும்.

புலனாய்வுத் துறையில் தகவல்களை வழங்கியும், அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளதமையின் விளைவாகவே நாம் இந்த பாரிய துன்பியல் சம்பவத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

2018 ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் முரண்பாடுகளை அடுத்து, பாதுகாப்புச் சபைக்கூட்டங்களுக்கு அவர் பிரதமரை அழைக்கவில்லை. இருப்பினும், பிரதமர் எனும் வகையில் அவர் இதில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இதனால், பிரதமரும் இந்த சம்பவத்திற்கு பதில் கூறவேண்டும்.

எவ்வாறாயினும், இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று மூன்று நாட்களில் சஹ்ரானின் ஒட்டுமொத்த குழுவினரையும் அடையாளம் கண்டு நாம் கைது செய்திருந்தோம்.

அத்தோடு, நாட்டில் ஏற்படவிருந்த பாரிய மதப்பிரச்சினையையும் நாம் தடுத்து நிறுத்தியிருந்தோம். இதற்காக பாதுகாப்புத் தரப்பினருக்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில், தற்போது நாம் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகிறோம். எதிர்க்கட்சி என்றாலும், எமது அரசியல் முரண்பாடுகளைத் தவிர்ந்து நாம் அனைவருக்கும் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறோம்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட காலத்திலேயே, விமான நிலையங்களை அரசாங்கம் மூடியிருந்தால் இந்த நோய்த்தாக்கம் இலங்கையில் ஏற்பட்டிருக்காது.

தற்போது, இதனை வைத்து அரசியல் லாபத்தை தேடவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஊரடங்குச் சட்டம் தொடர்பாகக் கூட அரசாங்கத்துக்கு ஒரு தெளிவின்மை காணப்படுவதை அவதானிக்க முடியுமாக இருக்கிறது.

நிவாரணப் பங்கீடு முதல் அனைத்தையும் அரசாங்கம், அரசியல் நோக்கத்திறாகத்தான் மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த நிலைமையை வைத்து அரசியல்லாபத்iதை தேட முற்பட வேண்டாம் என நாம் அரசாங்கத் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம்“ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...