Main Menu

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது!

உலக செழிப்பின் காரணகர்த்தாவான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் இன்றாகும். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் இது.

உத்தராயணத்தில் சூரியன் வடக்கு நோக்கி நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது.

இதன் முதல் நாள், ‘மகர சங்கராந்தி’ என்றும், ‘தைப்பொங்கல்’ என்றும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

இதற்கமைய வவுனியாவில் சிறப்பான முறையில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டது.

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக இடம்பெறும் தைப்பொங்கல் நாளில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக பொங்கல் கொண்டாடப்பட்டதுடன் கிறிஸ்தவ மக்களால் இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் பொங்கல் பொங்கப்பட்டது.

இதேவேளை வர்த்தக நிலையங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளிலும் சிறப்பான முறையில் பொங்கல் கொண்டாடப்பட்டிருந்தது.

அதேபோன்று மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரமஸ்ரீ. பூர்ணாசந்திராநந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்களாக பொது மக்களும் இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். மலையகத்தின் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மக்களின் வீடுகளில் தைப் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

வாழைச்சேனை, கல்குடா, வாகரை, கிரான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்து மக்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவானுக்கு கும்பம் வைத்து பொங்கல் பொங்கி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் உள்ள மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர். வீடுகளிலும், தொழில்சார் இடங்களிலும் பொங்கலிட்டு இவ்வருடம் சிறப்பாக பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மலையாளபுரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 பானைகளில் பொங்கல் இடப்பட்டது.

பிரதான பானையில் பொங்கலிடப்பட்டதை அடுத்து மக்கள் பொங்கல் பொங்கியிருந்தனர். இதன்போது சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் தேவாலயத்தில் இன்று காலை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இந்த பொங்கல் விழா நடாத்தப்பட்டது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்து மக்கள் இன்று தைப் பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து ஆலங்களிலும் வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டது.

பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தில் இன்று அதிகாலை தைப்பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதுடன் சூரியனுக்கு தீபம் காட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

பகிரவும்...